கவர்னர் தாத்தா இல்லை கவர்னர் லெவல்?? நிர்மலா தேவி ஆடியோ உரையாடலில் என்ன இருக்கிறது?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் பணியாற்றுகிறார் உதவிப் பேராசிரியை நிர்மலா. இவர், அதே கல்லூரியில் பி.எஸ்ஸி படிக்கும் மாணவிகள் நான்கு பேரிடம் பேசியதாக உலாவரும் ஆடியோ பதிவு, அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அந்த ஆடியோவில், மதுரை பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவருக்காக உதவிப் பேராசிரியை நிர்மலா, கல்லூரி மாணவிகள் நான்கு பேரை தவறான செயலுக்கு அழைத்ததாகப் பதிவாகியிருக்கிறது.

உதவிப் பேராசிரியை நிர்மலாவும் மாணவிகளும் பேசியதாவது…

“வீட்டில் பெரியவர்கள் யாராவது இருக்கிறார்களா? நான் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கிறேன். இங்கு மிகப்பெரிய பொறுப்பில் உயர் அதிகாரி இருக்கிறார். அவரைப் பற்றிய தகவலைச் சொல்ல முடியாது. அது ரகசியம். இதுவரை, நாம் ஆசிரியர் – மாணவர் என்ற உறவுமுறையில் இருக்கிறோம். இனி அடுத்த நிலைக்குப் போக ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இதுவரை நான் அகாடமிக்ஸூக்கு எப்படி சப்போர்ட்டிவ்வாக இருக்கிறேனோ, அதுபோல இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது” என்று சொல்லி நான்கு மாணவிகளுடன் பேச, செல்போன் அழைப்பை ஸ்பீக்கரில் போடச் சொல்கிறார் பேராசிரியை நிர்மலா.
“ஆப்பர்சூனிட்டியை ரகசியமாத்தான் செய்யணும். இதுமூலமா, எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாம உங்களுடைய படிப்பை பெரிய அளவுக்குக் கொண்டுபோக முடியும். அதுக்கு நான் உறுதி தர்றேன். அந்த அளவுக்கு மதுரை பல்கலைக்கழகத்துல உயர் பொறுப்பில் இருக்கிறார் அவர். சில விஷயங்களை சக்சஸ்ஃபுல்லாக முடிக்க காலேஜ் ஸ்டூடன்ட்ஸை எதிர்பார்க்கிறாங்க. நான் இந்த அளவுக்கு இறங்கினதில்லை. சில விஷயங்கள் சொல்ல முடியாது. நீங்கள் புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன்.

என்கிட்ட ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்காங்க. நானும் நாகராஜ் சாரும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு பேப்பர் வேல்யூவேஷனுக்கு வந்தோம். அப்போ என்கிட்ட வேண்டுகோளா கேட்டாங்க. நம்ம காலேஜ் பற்றித் தெரியும். இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா, யார் யாருக்கு சம்பந்தம் இருக்கோ, அவங்களுக்கெல்லாம் நெகட்டிவ் இமேஜ் வர வாய்ப்பு இருக்கு. எனக்கு அவங்க கொஞ்சம் அஸ்ஷூரன்ஸ் கொடுத்திருக்காங்க. அதைவெச்சு உங்களைப் பெரிய அளவுக்குக் கொண்டுபோக முடியும். இன்னும் ஒன்றரை மாசம்தான். உங்களுடைய தேர்வு முடிஞ்சுடும்.

அதனால்தான் ஷார்ப்பாகப் பேசுறேன். இனிமே தியரிதான். தியரியில் கை வைக்க முடியாத அளவுக்கு என்னால செய்ய முடியும். உங்க மார்க்கில் கை வைக்க முடியாததுன்னு தெரிந்த பிறகுதான் இதுக்கு சம்மதிக்க ஆரம்பிச்சேன். ஃபைனான்ஷியல் அளவிலும் சப்போர்ட் இருக்கும். அகாடமி நிலையிலும் நல்ல சப்போர்ட் இருக்கும். இது வெளிய நாலு பேருக்குத் தெரியாத அளவுக்கு இருக்கணும். இது உங்களுடைய அப்பா-அம்மாவுக்குச் சொல்லி செய்வீங்களா, சொல்லாமச் செய்வீங்களாகிறதுதான் கேள்வி. பெற்றோருக்குத் தெரிஞ்சு செஞ்சா, வர்ற பணத்தை அக்கவுன்ட் நம்பர்ல பணத்தைப் போட்டுவிட்டிருவேன். நீங்க படிச்சு முடிச்சுட்டு என்ன ப்ளான் வெச்சிருக்கீங்கனு தெரியலை. ஆனா, நான் ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். தொலைதூரப் படிப்பில் மாலை நேரத்துல செமினார் போயிக்கிட்டிருக்கு. நான் அதுல வருவதால் யுஜி, பிஜி-க்கு நோட்ஸ் தயாரிக்கிற வேலை இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மாணவிகள் இடைமறிக்கிறார்கள்.
நிர்மலா, “நான் முழுசா சொல்லி முடிக்கிறேன். அவசரப்படமா முடிவெடுத்து சொல்லுங்க. வீட்டுல இருந்து ரெகுலர் க்ளாஸுக்குப் போய்ப் படிக்கவேண்டிய அவசியம் இருக்காது. இந்த ஸ்கீமுக்கு வந்துட்டா, மதுரை பல்கலைக்கழகம் உங்களுக்கு முதுகெலும்பா இருக்கும். 85 சதவிகிதத்துக்குமேல் மதிப்பெண் வரும். இதைத் தவிர, பிஹெச்.டி படிப்புல ஃபெல்லோஷிப் வாங்குற அளவுக்குக் கொண்டுபோக முடியும். மதுரை பல்கலைக்கழகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்க டேலன்ட்டட் ஸ்டூடண்ஸ். மார்க் மட்டுமல்ல, எல்லா லிஸ்ட்லயும் உங்க பேரை வரவழைக்க முடியும். ஒவ்வொரு மாசமும் வருமானமும் வரும், ஃபெல்லோஷிப்பும் வரும். நோட்ஸ் தயாரிக்கிறது, கொஸ்டீன் பேப்பர் தயாரிக்கிறதுல நீங்க வேலைபார்த்துக்கிட்டே படிக்கலாம். மாசாமாசம் உங்களுக்கு வருமானம் வரும்” என்று ஆசைவார்த்தை கூறுகிறார் நிர்மலா.

கல்லூரி மாணவிகள், ``இதுபற்றி இனிமே பேச வேண்டாம்” என்கின்றனர்.

பேராசிரியை நிர்மலா விடாமல், “ஒரு வாய்ப்பு வந்தது. அதைச் சொன்னேன் கண்ணா. இஷ்டமில்லைன்னா, நான் ஒண்ணும் சொல்லல கண்ணா. நிறைய விஷயத்துல என்னை ரொம்பவே டெஸ்ட் பண்ணிட்டு சொன்ன விஷயம்தான் இவ்வளவும். அஃபிஷியலா இருக்கிறதலா யாருன்னு சொல்ல மாட்டேன். எதுவும் சாதிக்க முடியும்கிறதால்தான் உங்கிட்ட சொல்றேன். என்னைத் தனியா தேர்ந்தெடுத்து சில விஷயங்களை ஸ்பெஷலைசேஷன் பண்ணிருக்காங்க. மொத்தமா 400 பேர்ல பியூர் அப்ஸர்வேஷன்ல என்னை செலெக்ட் செஞ்சிருக்காங்க” என்று சொன்னவர், கவர்னரையும் இந்தப் பேச்சுக்குள் கொண்டுவந்தார்.

“உங்களுக்கு கவர்னர் வர வீடியோலாம் அனுப்பிவெச்சுருக்கேன்ல. அதுல சில விஷயம் நடந்தது. அது நடுவுல ஸ்க்ரீன் இல்லாம இருந்தது. கவர்னர் லெவல்தான். கவர்னர் தாத்தா இல்லை. கவர்னர் மீட்டிங்கில் எந்த அளவுக்குப் பக்கத்துல இருந்து வீடியோ எடுத்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். அந்த அளவுக்கு எனக்கு மூவ் பண்ண அனுமதி கொடுத்திருக்காங்க. இலை மறை காயா வெளியில் நாலு பேருக்குத் தெரியாத அளவுக்கு இருக்கு. நான் யாருன்னு சொல்லிட்டா, நீங்க சீக்கிரம் அஷூரன்ஸ் கொடுக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. அந்த அளவுக்கு சீக்ரெட், பிரைவசி மெயின்ட்டன்ஸ் செய்றாங்க. இங்க பேப்பர் வேல்யுவேஷன் செய்யும்போதே ரெண்டு மூணு தடவை என்னை டெஸ்ட் பண்ணிட்டாங்க. நான் உடனே ஓப்பன் செய்யாம நீங்க டிகிரி வாங்கணும்கிறதுக்காகத்தான் மெதுவா ஓப்பன் பண்றேன். போட்டி வந்தாலும் என்னால சமாளிக்க முடியும். அவங்களை மாற்ற முடியும்னு 99 சதவிகிதம் நம்பிக்கையிருக்கு.

யாரையும் நான் punish செய்யப்போறதில்லை. நான் அடுத்த நிலைக்குப் போகப்போறேன். உங்களை கை தூக்கிவிடுகிறதுக்குத்தான் கூப்பிடுறேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தா இன்னும் கொஞ்சம் சிந்திக்கலாம். இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அவசரப்பட்டு முடிவெடுக்க வேணாம் கண்மணிகளா. நாம பேசுற விஷயங்கள், இந்தக் காலத்துல ரொம்ப சாதாரண விஷயங்கள்தான். இது உங்களுக்கும் எனக்கும் ஏன் உலகத்துக்கே தெரியும். இதை ரொம்ப பாசிட்டிவா ஹேண்டில் செய்யணும்” என்று ஆசைவார்த்தைகளை அள்ளிவிடுகிறார் நிர்மலா.மாணவிகள், “இல்ல மேடம், வேண்டாம்” என்று மறுக்கிறார்கள்.